Wednesday, March 19, 2008

ராமதாஸ்: தோல்வியா, தந்திரமா?

அரசியலில் தற்போது ராமதாஸ் கலைஞரிடம் ராஜயசபா சீட் கேட்டு கலைஞர் மறுத்ததோடு மட்டுமில்லாமல், காங்கிரஸுக்கு அந்த சீட்டை விட்டு கொடுத்தன்மூலம் ராமதாஸின் மூக்கை சாமார்தியமாக உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சாமார்தியசாலி யார் என்பது கொஞ்சம் ஆழமாக அரசியல் நடவடிக்கைகளை கவனித்தால் தெரியும்.

தற்போதுல்ல அரசியல் சூழ்நிலையில் தனது கட்சிக்கு சீட் கிடைக்காது என்பதை கண்டிப்பாக ராமதாஸ் உணர்ந்திருப்பார். அப்படியிருக்கையில் எதற்காக சீட் கேட்டு வேண்டுமென்றே அவமானப்படவேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே திமுக கூட்டணி தட்டுதடுமாறிதான் வெற்றிபெற்றது. எனவே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போது இருக்கும் திமுக கூட்டணி உடையாமல் அப்படியே போட்டியிட்டாலும் தேர்தலில் வழக்கம்போல் அடிக்கும் ஆளும்கட்சிகாண எதிர்புணர்வு (anti incumbency factor) மற்றும் திமுகவின் குடும்ப சண்டை (அழகிரி-தயாநிதி மாறன் மற்றும் கனிமொழியையும் அரசியலில் இறக்கியது) போன்றவை எதிர்கட்சிகளால் அரசியலாக்கபட்டு இந்த கூட்டணியின் வோட்டுவங்கி மேலும் குறையும். இந்த கூட்டணியில் மேலும் கட்சிகளை சேர்க்கவும் முடியாது. ஆக வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி என்பது ஒரு கேள்விகுறிதான்.

ஒருவேளை அசட்டு துணிச்சலில் இந்த திமுக கூட்டணி அப்படியே தொடருமானால், இந்த முறை அம்மா ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார். அதேபோல் விஜயகாந்தும் தனித்து நின்று தனது வோட்டுவங்கி என்ன என்பதை தெரிந்துகொண்டார். இனி தேர்தலில் தனித்து போட்டியிட்டு வோட்டுவங்கியை மட்டும் காட்டாமல் கைவசம் எம்.எல்.ஏ க்களோ, எம்.பி. க்களோ இருந்தால்தான் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகமுடியும் என்பதை கண்டிப்பாக உணர்ந்திருப்பார்.

அம்மாவும், கேப்டனும் வெளியில் என்னதான் வீரமாக வசனம் பேசினாலும் இக்கட்டான சுழ்நிலை உருவானால் கூட்டணி வைக்க தயங்கமாட்டார்கள் என்பதுதான் என் கருத்து. வைகோவிடமே ஜெயலலிதா கூட்டணி வைத்த பிறகு இனி அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். எனவே திமுக கூட்டணி உடையாமல் அப்படியே தொடருமானால், ஜெயலலிதாவுக்கு, விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதை தவிர வேறு வழியில்லை. விஜயகாந்தும் தன்னை தொடர்ந்து சீண்டிவரும் கலைஞருக்கு பாடம் புகட்ட அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ள தயாராகவே இருப்பார்.

அப்படி ஒரு கூட்டணி உருவாகிவிட்டால் திமுக கூட்டணி ஜெயிப்பதற்காண வாய்ப்பே கிடையாது. அப்படி ஒரு ஆபத்தான சூழ்நிலை உருவாகும் முன் நாமே அங்கு போய்விடலாம் என்று ராமதாஸ் நினைத்திருக்கலாம்.

தற்போதுள்ள அரசியல் சுழ்நிலையை கவனித்தால் அம்மாவுக்கும் விஜயகாந்தை வளர்த்துவிடுவதில் உடன்பாடில்லை. வேறுவழில்லை என்றால்தான் அந்த முடிவு. விஜயகாந்த்தை வளர்த்துவிடாமல் அதிமுகவை காப்பாற்ற ஒரேவழி ராமதாஸை அதிமுகவிற்கு இழுப்பதுதான். இதன்மூலம் அதிமுகவிற்கு ஒட்டுசதவிகிதம் கூடும் அதேநேரத்தில் திமுகவிற்கு குறையும். பாமகவினால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட விஜயகாந்தை திமுகவின் பக்கம் இழுப்பதிலும் சிக்கல். தனது கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவரை தனது கூட்டணிக்கே அழைத்து அவருக்கு தற்போது இருக்கும் வோட்டுவங்கியின் கணக்குபடி சீட் வழங்க கலைஞருக்கும் மனசு வராது, விஜயகாந்தும் இவ்வளவு நாள் திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு திடீரென்று திமுகவிடமே கூட்டணி வைத்தால் அவ்ருடைய இமேஜும் கடுமையாக அடிவாங்கும். அனேகமாக வைகோவிற்கு ஏற்பட்ட கதி அவருக்கும் ஏற்படலாம்.

எனவே ராமதாஸ் அம்மா பக்கம் போவதென்று முடிவெடுத்துவிட்டார். தேர்தல் சமயத்தில் திடீரென்று முடிவெடுக்காமல் 'திமுக எங்களை தொடர்ந்து அவமானபடுத்திவருகிறது எனவே நாங்கள் இந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என்று ஒரு காரணத்தை கூறுவதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

பாராளுமன்றத்துக்கான தேர்தல் எப்போது வரும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறவும் முடியாது, அதேசமயத்தில் அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாய் அம்மாவை நம்பி இப்போதே கூட்டணியை விட்டு வெளியே வரவும் முடியாது. எனவே நாடகத்தை நடத்தி வைப்போம். முடிவை கடைசியில் எடுப்போம் என்பதுதான் ராமதாஸின் கணக்காக இருக்கும்.

தோற்போம் என்று தெரிந்தே போட்டிபோடுவதும் ஒருவகையான தந்திரம்தான். ராமதாஸ் உண்மையிலேயே மூக்குடைப்பட்டாரா அல்லது கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு ஒரு காரணத்தை உருவாக்கிகொண்டாரா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும்

1 comment:

வசந்தம் ரவி said...

நண்பரே நீங்கள் உங்கள் வலைப்பதிவை தமிழ்மணம் போன்ற திரட்டி யில் இணைத்து கொண்டீர்கள் என்றால் உங்கள் பதிவுகள் இரண்டுமணி நேரத்துக்குள் கூகிள் ப்ளோக் சர்ச்'ல் காட்டப்படும், இல்லையென்றால் மிகவும் தாமதமாக தான் கூகிள் ப்ளோக் சர்ச்'இல் வரும் , கூகிள் தேடு பக்கத்தில் வர இரண்டு மாதங்கள் கூட பிடிக்கும், இதற்க்கு எளிய வழி தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணைவது தான் . நன்றி